×

5 ஆண்டாக பராமரிக்கப்படாத பாப்பணம்-வீ.நாங்கூர் சாலை

காரியாபட்டி, அக். 10: காரியாபட்டி அருகே, 5 ஆண்டாக பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருக்கும் பாப்பணம்-வீ.நாங்கூர் சாலையை, புதிதாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி அருகே, பாப்பணம் முதல் வீ.நாங்கூர் வரை உள்ள சாலை 4 கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலையில் வீ.நாங்கூர், டி.வேப்பங்குளம், கூராநேந்தல், தொட்டியாங்குளம், திம்மாபுரம், பல்லவரேந்தல் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் வெளியூர்களில் படிக்கின்றனர். இவர்கள் டூவீலர் மற்றும் சைக்கிளில் சென்று வருகின்றனர். சாலை மோசமாக இருப்பதால், போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். இதேபோல, கிராமங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களும், வேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டாக இந்த சாலையை பராமரிக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது.

வீ.நாங்கூர் சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை மோசமாக இருப்பதால், அரசு பஸ் போக்குவரத்தை நிறுத்தும் நிலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த நாங்கூர் சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. சாலையில் தார் மற்றும் கற்கள் பெயர்ந்து மணல் சாலையாக மாறியுள்ளது. சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். டூவீலரில் செல்வோர் மணலில் சறுக்கி விழுகின்றனர். இந்த சாலையை புதிதாக அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Pappanam-Vee Nangoor Road ,
× RELATED வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்குப்பதிவு