×

அருப்புக்கோட்டை அருகே அடிப்படை வசதியில்லாத காலனி

அருப்புக்கோட்டை, அக். 10: அருப்புக்கோட்டை அருகே, பாலையம்பட்டி ஊராட்சியில் உள்ள வேல்முருகன் காலனியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 30 ஆண்டாக காலனி புறக்கணிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலையம்பட்டி கிராம ஊராட்சியில் வேல்முருகன் காலனி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த காலனியில், போதிய அடிப்படை வசதியின்றி, புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சில தெருக்களில் வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் தேங்குகிறது. சில தெருக்களில் வாறுகால் கட்டப்படாமல் உள்ளது.  இதனால், வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்குகிறது. இதில், கொசுக்கள் உருவாகி  சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், கழிவுநீர் தேக்கத்தால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வாறுகால்களை தூர்வாரக்கோரி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தெருக்களில் சாலை வசதியில்லை. கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத நிலை உள்ளது. மயானச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர்.

தெருக்களை இணைக்கும் சிறுபாலங்கள் சேதமடைந்துள்ளன. பாலங்களின் நடுவில் மெகா பள்ளம் ஏற்பட்டு, கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் பாலங்களில் உள்ள பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். ஆண், பெண்களுக்கு கழிப்பறை வசதியில்லாததால், ரயில்வே டிராக் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் புதர்மண்டிக் கிடப்பதால், இரவு நேரங்களில் பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைக்கக்கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. காலனியில் உள்ள பொது அடிபம்புகள், மினிபவர் பம்புகளில் தண்ணீர் வராமல், காட்சிப் பொருளாக உள்ளது.

அடிபம்பைச் சுற்றி கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. குடிநீர் பற்றாக்குறையால், புழக்கத்திற்கான தண்ணீர் ஒரு குடம் ரூ.5க்கும், குடிநீர் ஒரு குடம் ரூ.10 முதல் ரூ.12 வரையும் விலை கொடுத்து வாங்குகின்றனர். இப்பகுதியில் ஒரே ஒரு பொதுக்குழாய்தான் உள்ளது. இதில், தாமிரபரணி தண்ணீரை பிடிக்க, பலமணி நேரம் காத்திருந்து செல்கின்றனர். தண்ணீர் வரும் சமயங்களில் குழாயடியில் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஊராட்சி ஒன்றியம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் இல்லை. காலனி முழுவதும் வாறுகால், சிறுபாலம் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, வேல்முருகன் காலனிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...