×

அதிகாலை நேரத்தில் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு போலீசுக்கு டிமிக்கி கொடுத்து கேரளாவுக்கு செல்லும் ஜீப்புகள் விபத்து நடந்தும் விபரீதம் தொடர்கிறது

கம்பம், அக்.10: கம்பத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாகவும், குமுளி வழியாகவும் தினமும் அதிகாலையில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் கொண்டு  தோட்ட வேலைக்குச் செல்லும் ஜீப்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஜீப்புகளில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்  தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். போடிமெட்டு, கம்பம்மெட்டு மற்றும் குமுளி வழியாக ஆயிரக்கணக்கான ஜீப்புகளில் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். கம்பத்தையொட்டியுள்ள ஆமையார், புத்தடி, புளியமலை, நெடுங்கண்டம், உடும்பன்சோலை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் ஏலக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தோட்டங்களில் கூலி வேலைக்கு கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கூடலூர், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், எரசை, குச்சனூர், சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், கே.கே பட்டி போன்ற ஊர்களிலிருந்து தினந்தோறும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கேரளாவிற்கு  வேலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த மாதம் தோட்ட வேலைக்குச் சென்ற ஜீப் ஒன்று போடி மெட்டு அருகே  விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இந்த கோர விபத்தினால் தேனி மாவட்ட காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை பின்பற்றி அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளுக்கு அபராதம்  விதிப்பது, ஜீப்புகளை பறிமுதல் செய்வது என்று கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால் வழக்கமாக காலை 6 மணிக்கு வேலைக்கு கிளம்பும் தோட்டத் தொழிலாளிகள் ஜீப்புகளில் ஒரு சிலர் போலீசாரின் கெடுபிடிக்கு பயந்து அதிகாலை 3 மணிக்கு  20 பேர் முதல் 25 பேர் வரை ஆட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றனர். அதேபோல மதியம் மாலை மூன்று மணிக்கு மேல் வேலை முடிந்து திரும்பும் அவர்கள் வழக்கத்திற்கு மாறாக மதியம் ஒரு மணி அளவில் கம்பம் திரும்பி வந்து விடுவதால் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி அதிகளவில்  ஏற்றிச் செல்கின்றனர். இது பெரும் விபத்துக்கு வழி வகுக்கும் என  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஒரு சில டிரைவர்கள் அதிகாலையில் 3 மணிக்கே 25 பேர் வரை  ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கின்றனர். ஒரு மணிக்கெல்லாம் வேலையை முடித்து திரும்பி வருகின்றனர் இப்படி வருவதால் போலீசார் கண்ணில் படாமல் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர் .இதை பார்க்கும் மற்ற டிரைவர்களும் இதே பாணியை பின்பற்றி அதிக அளவில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதை உடனடியாக மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...