×

காரைக்குடி அருகே ரேஷன் கடை விற்பனையாளரை இடம் மாற்ற மக்கள் எதிர்ப்பு

காரைக்குடி, அக்.10: காரைக்குடி அருகே ரேஷன்கடை விற்பனையாளரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன. அதில் ரேஷன் கடை எண் 2ல் விற்பனையாளராக அரண்மனை சிறுவயலை சேர்ந்த தேவி என்பவர் கடந்த மூன்று மாதங்களாக பணி புரிந்து வருகிறார். நேற்று இவரை கல்லல் பாம்கோ 2க்கு மாற்றம் செய்ததாக தகவல் வந்தது. இந்த கடையை, கடை எண் 1ன் விறபனையாளரையே கூடுதல் பொறுப்பாக கவனிக்க சொன்னதாக தெரிகிறது. இதை அறிந்த 300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் தேவியை மாற்றம் செய்யக்கூடது என வலியுறுத்தி, ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் ஆர்ஐ வந்து சமாதானம் செய்த பிறகு அனைவரும் கலைந்துசென்றனர். இது குறித்து மக்கள் கூறுகையில், ‘‘இரண்டாம் எண் கடைக்கு விற்பனையாளராக தேவி வந்த பிறகு மாதத்தில் 26 நாள்களும் கடை திறந்து விற்பனை செய்கிறார். ஒழுங்காக விற்பனை செய்யும் கடை விற்பனையாளரை தேவையில்லாமல் தற்போது மாற்றம் செய்துள்ளனர். இதை கண்டித்து கடையை முற்றுகையிட்டோம்’’ என்றனர்.

இது குறித்து குடிமை பொருள் தாசில்தாரிடம் கேட்டபோது, ‘‘பாம்கோவில் இருந்து தேவிக்கு இட மாறுதல் வந்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் ஏற்கவில்லை. இது குறித்து பாம்கோ நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளோம். நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்யும் வரை தேவியே இக்கடை விற்பனையாளராக பணியில் தொடர்வார்’’ என தெரிவித்தார்.

Tags : ration shop ,Karaikudi ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!