×

மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் டூவீலர் விபத்துகள்


சிவகங்கை, அக்.10: சிவகங்கை மாவட்டத்தில் டூவீலர் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் 445 ஊராட்சிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமச்சாலைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இங்கு நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகன விபத்துகளைவிட டூவீலர் வாகன விபத்துகள் அதிகம் நடந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 952 சாலை விபத்துகள் நடந்தன. இந்த விபத்துகளில் 261 பேர் மரணமடைந்தனர். 2016ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 322 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஆயிரத்து 604 பேர் காயமடைந்துள்ளனர். 333 பேர் மரணமடைந்துள்ளனர். 2017ம் ஆண்டு மொத்தம் ஆயிரத்து 112 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 295 பேர் மரணமடைந்துள்ளனர். 2018ம் ஆண்டில் 853 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 244 பேர் மரணமடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 300ல் உள்ளது. இதில் டூவீலர் விபத்துகளில் இறந்தவர்களே அதிகம். அனைத்து விபத்துகளிலும் டூவீலரில் சென்று இறந்தவர்களே அதிகம். டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

இந்த ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட டூவீலர் விபத்துகள் நடந்துள்ளன. திருமணம் மற்றும் விசேஷ நாட்கள், விழாக்கள் உள்ளிட்ட நாட்களிலேயே அதிகப்படியான விபத்துகள் நடக்கின்றன. மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம், மானாமதுரை பகுதிகள், மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகள், மதுரை, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன. டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் தவிர எஞ்சியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிரந்தர ஊனம் அடைந்துள்ளனர். போலீசார் கூறுகையில், சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்துள்ளதே அதிகமான விபத்திற்கு காரணம். சாலை விதிகளின்படி நடந்து விபத்தில் சிக்கியவர்கள் மிகக்குறைவேயாகும். டூவீலர் விபத்துகளில் மரணம் அடைந்தவர்களில் 95 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியவர்களாவர். தற்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்டோர் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Tags : accidents ,district ,
× RELATED கொரோனா அதிகரித்து வரும் நிலையில்...