×

காரைக்குடி சாலையில் முகாமிடும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து

காரைக்குடி, அக்.10: காரைக்குடி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி டிராபிக் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. காரைக்குடியின் முக்கிய சாலைகளான கல்லூரி சாலை, 100 அடி ரோடு, செக்காலை ரோடு, கல்லூரி சாலை, கொப்புடைய அம்மன் கோயில் சாலை, பழைய பஸ் ஸ்டாண்டு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளன. இதனை சரி செய்ய போக்குவரத்து போலீசார் தினமும் பெரும்பாடு பட்டு வருகின்றனர். ஆனால் நகரின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சிக்னல் விழுந்து வாகனங்கள் செல்ல முற்படும் போது கால்நடைகள் வரிசையாக கடந்து செல்கின்றன. இதனால் திடீரென வாகனத்தை நிறுத்தும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விடுகின்றன. விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகின்றன. பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிய விடுகின்றனர். சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் நகரில் கால்நடைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனவே கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்க சம்மந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Karaikudi Road ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...