×

திருப்புத்தூர் பூமாயி கோயிலில் அம்பு எய்தல் விழா

திருப்புத்தூர், அக்.10: திருப்புத்தூரில் நவராத்திரியின் நிறைவு விழாவையொட்டி பூமாயி அம்மன் கோயிலில் அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் நவராத்திரி விழா கடந்த செப்.29ம் தேதி துவங்கியது. 10ம் நாளான நேற்று முன்தினம் மாலை பூமாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் பூமாயி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 8.30 மணியளவில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் வாணவேடிக்கைகளுடன் அம்மன் வீதி உலா நடந்தது. இரவு 9 மணியளவில் கோயில் வளாகத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இளைஞர்கள் ஆர்வமுடன் அம்பை போட்டி போட்டு பிடித்தனர்.இதேபோன்று திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோக பைரவர் ஆலயத்தில் நவராத்திரி விழா கடந்த 29ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

நிறைவு நாளான நேற்று முன்தினம் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலையில் உற்சவ அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயிலிருந்து புறப்பாடு நடைபெற்றது. நான்கு ரோடு வழியாக அம்பு விடும் பொட்டலான சீரணி அரங்கத்திடலினை வந்தடைந்தது. பின்னர் அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த வாழை மரத்திற்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குருக்கள் மரியாதைக்குப் பின் உற்சவ வாகனத்தில் ஏறி வாழைமரத்தை சுற்றி வந்து நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Arrow Launch Ceremony ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்