×

முத்துமாரியம்மன் கோயில் விழாவில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

திருவாடானை, அக்.10:  திருவாடானை வடக்கு ரத வீதியிலுள்ள முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில், ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். திருவாடானை வடக்கு ரத வீதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் புரட்டாசி மாத திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனைகள் நடைபெற்றன. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் வாண வேடிக்கைகள் நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்வாக கடைசி நாளான நேற்று பால் காவடி, பறவைக் காவடி, பூக்குழி இறங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு ரதவீதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

பரமக்குடி நகர் பகுதியில் உள்ள காட்டுபரமக்குடி முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. கோயில் திண்ணையில் தினந்தோறும் பெண்கள் கும்மியடித்து இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடினார்கள். அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனை, சிறப்பு வழிபாடும் நடந்தது. மழை பெய்ய வேண்டி 108 திருவிளக்கு நடைபெற்றது. இறுதி நாளான நேற்று காலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். மாலையில் முளைப்பாரி எடுத்து காட்டுப் பரமக்குடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்து கும்மியடித்தனர். பின்னர் முத்தையா கோவில்  படித்துறையில் வைகை ஆற்றில் கரைத்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Tags : Muthumariamman Temple Ceremony ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை