×

அடிப்படை வசதியில்லாத குடிசை மாற்று வாரிய வீடுகள்

சாயல்குடி, அக்.10:  சாயல்குடி குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் தெருக்களில் அடிப்படை வசதியில்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். சாயல்குடி அண்ணா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.464.28 லட்சங்கள் மதிப்பீட்டில் 92 வீடுகள் கட்டப்பட்டது. இதிலுள்ள அனைத்து வீடுகளிலும், பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது வீடுகள் மற்றும் தெருக்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக குடியிருப்புவாசிகள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் கூறும்போது, கட்டிடம் கட்டப்பட்டு பத்து வருடங்களே ஆன நிலையில் கட்டிடம் வலுவிழந்து காணப்படுகிறது. வீடுகளுக்கு போடப்பட்ட குடிநீர் வசதி உவர்ப்பு தண்ணீர் என்பதால், பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்குகிறது. ஆனால் தண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்றிற்கு ரூ.5 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அடுக்குமாடி வீடுகளின் தண்ணீர் குழாய்கள், கழிவறை குழாய்கள் சேதமடைந்து கிடப்பதால், தண்ணீர் வழிந்தோடி கட்டிடங்கள் சேதமடைந்து வருகிறது. தெருக்களில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் வசதியில்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு முன் தேங்கியே கிடக்கிறது.

தெரு முன் இருக்கும் பொது கழிவுநீர் வாய்க்கால் வழியாக கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஓரிடத்தில் தேங்கி கிடப்பதால், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் குடியிருக்க முடியவில்லை. அருகிலிருக்கும் கால்நடை மருத்துவமனை கழிவுகள், 4 தெரு குப்பைகள் இப்பகுதியில் சிதறி கிடக்கிறது. இதனால் தெரு சுகாதாரமற்று கிடப்பதால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. இரவு நேரங்களில் தொகுப்பு வீட்டு தெருவிளக்குகள் எரிவது கிடையாது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், பெண்கள் வெளியே சென்று  வரமுடியவில்லை. வீடுகள் மற்றும் கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமித்து சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் புதர் காடாக இருப்பதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது. எனவே சாயல்குடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை மராமத்து செய்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cottage replacement board houses ,
× RELATED ராமநாதபுரம் முகாமில் தனிமையில்...