×

மேலூரில் தொடர்கதையாகும் காவிரி குடிநீர் விரயம்

மேலூர், அக். 10: மேலூரில் குழாய் உடைப்பால் காவிரி கூட்டு குடிநீர் விரயமாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீரே இதுவரை கைகொடுத்து வருகிறது. நகராட்சியை சுற்றி ஆழ்துளை குழாய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு மிக, மிக குறைந்து போன நேரத்தில் இந்த காவிரி கூட்டு குடிநீர்தான் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.இந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேலூர் காந்திஜி பூங்கா ரோட்டில் தனி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள் தினசரி குழாய்களில் உடைப்புகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அது நடைபெறுவதே இல்லை. நாளிதழ்களில் செய்தி வெளியான பிறகே அந்த இடத்திற்கு சென்று அவற்றை சரிசெய்கின்றனர்.

இதுபோலத்தான் நேற்று மேலூர்- மதுரை ரோட்டில் பெட்ரோல் பங்க் எதிரே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பொங்கி வழிந்தோடி அப்பகுதியில் குளம்போல் தேங்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக இந்த இடத்தில் வீணாகி வருகிறது. இதேஇடத்தில் தான் கடந்த மாதமும் உடைப்பு ஏற்பட்டது. தினகரன் செய்தியை தொடர்ந்து அவை சரிசெய்யப்பட்டது. இதேபோல் செக்போஸ்ட் பகுதியில் உள்ள பாண்டியன் நகரிலும் கடந்த 3 நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அப்பகுதி முழுவதும் நிறைத்து வருகிறது. தட்டுப்பாட்டு நேரத்தில் தண்ணீர் இப்படி விரயமாவதை கண்டு பொதுமக்கள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் தண்ணீர் வீணாவதை தடுக்க உடனே முன்வர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cauvery ,Melur ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி