×

பெரியார் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு

சேலம், அக்.10: சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. பொதுச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை வகித்து, தலைவர் பசுபதி பேசுகையில், ‘‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகம், தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடித்து வருகிறது. எனவே, இதனை கண்டித்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை (11ம் தேதி) மாலை பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்,’’ என்றார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில், சென்னை துரைப்பாக்கம் டிபி ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்துவதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்களின் பதவிஉயர்வு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். பச்சியப்பன் கல்லூரியில் ஆசிரியர்-அலுவலர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் சிகேஎன் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மல்லிகா சந்திரனின் நிதிமுறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதுடன், பிஎச்டி பட்டத்தினை ஆய்வு செய்து ஊதிய உயர்வினை ரத்து செய்ய வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் அறிவித்தபடி, ஈரோடு சிக்கய நாய்க்கர் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : protest ,Periyar University ,teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்