×

மாவட்டத்தில் சந்து கடைகள் அதிகரிப்பால் பார் ஏலம் போகாத 58 மதுக்கடைகள்

நாமக்கல், அக்.10: குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சந்து கடைகள் அதிகரிப்பால்,  நாமக்கல் மாவட்டத்தில் 58 மதுக்கடைகளில் பார்கள் ஏலம் போகவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் 186 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளின் அருகில் மதுபான பார்கள் நடத்துவதற்கான டெண்டரை, சமீபத்தில் டாஸ்மாக் நிர்வாகம் நடத்தியது. இதில் ஆளுங்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற வியாபாரிகளுக்கு மட்டுமே விண்ணப்பம் அளிக்கப்பட்டு, டெண்டரில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி நடத்தப்பட்ட டெண்டரில், மாவட்டம் முழுவதும் 128 கடைகளில் பார் நடத்த லைசென்சு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பார் நடத்த அனுமதியில்லாமல் இயங்கி வந்தவையாகும். மதுவிலக்கு மற்றும் உள்ளூர் போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளின் ஆசியுடன், இந்த பாரை உள்ளூர் அதிமுகவினர் நடத்தி வந்தனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பார்களுக்கான லைசென்சு கட்டணத்தை தமிழக அரசு  குறைத்தது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 128 மதுபான பார்களுக்கு லைசென்சு அளிக்கப்பட்டு உள்ளது.

நகர் பகுதியில் உள்ள பார்களுக்கு ஒயின்ஷாப் விற்பனையில் 1.8 சதவீதம், கிராமப்புறங்களில் உள்ள பார்களுக்கு ஒயின்ஷாப் விற்பனையில் 1.6 சதவீதம் லைசென்சு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதியில் ஒரு ஒயின்ஷாப்பில் தினமும் ₹1 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெற்றால், அந்த கடையின் அருகாமையில் உள்ள பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஒரு மாதம் ₹48 ஆயிரம் லைசென்சு கட்டணமாக செலுத்த வேண்டும். ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள அரசு மதுக்கடைகன் அருகில் பார் நடத்த யாரும் முன்வரவில்லை. மேலும் சந்து கடைகள் அதிகம் உள்ள ஊர்களிலும், பார்கள் நடத்த ஆளுங்கட்சியினரே தயக்கம் காட்டுகிறார்கள். இது போன்ற காரணங்களால், 58 மதுக்கடைகளில் பார்கள் ஏலத்தில் போகவில்லை. குறிப்பாக  குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலம், முத்துக்காப்பட்டி, பேளுக்குறிச்சி, வளையப்பட்டி, எலச்சிபாளையம் உள்ளிட்ட ஊர்களில் சந்து கடைகள் அதிகம் இருக்கிறது. இருப்பினும் இந்த கடைகளை பார் நடத்த மீண்டும் வரும் 21ம்தேதி டாஸ்மாக் நிர்வாகம் டெண்டர் நடத்துகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், சேலம் மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகமான பார்களுக்கு லைசென்சு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பார்களுக்கும் லைசென்சு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பார்களிலும் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடந்து வருகிறது. இரவு 9.50 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடையின் லைட்டை அணைத்து கடைகளை அடைத்து, பார்களில் வியாபாரம் நடத்த வழிவிட வேண்டும் என, அனைத்து மதுபான கடை சூபர்வைசர்களுக்கும் டாஸ்மாக் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் தான் பார்களில் மதுபான பாட்டில்கள் இரவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் உரிமையாளர்கள் விற்பனை செய்யும் கூடுதல் விலையில் குறிப்பிட்ட பங்கு, மதுவிலக்கு, உள்ளூர் போலீசார், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் வரை சென்று விடுகிறது. இதனால் இந்த தொழிலில் அனுபவம் உள்ள நபர்கள் மட்டுமே பார் நடத்த லைசென்சு பெற்றுள்ளனர்.

Tags : liquor shops ,district ,alley shops ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்