×

எச்சனம்பட்டி ஏரிக்கு கேஆர்பி அணை நீரை கொண்டு வரவேண்டும்

தர்மபுரி, அக்.10: காரிமங்கலம் எச்சனம்பட்டி ஏரிக்கு, கேஆர்பி அணையின் தண்ணீரை கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும், போதிய மழையின்மை காரணமாக வறண்டு கிடக்கின்றன. சமீபத்தில் பருவமழை பெய்த போதும், ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரிகளுக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. கேஆர்பி அணையிலிருந்து வலதுபுற கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால், காரிமங்கலம் மணிக்கட்டியூர் மதகிற்கு வருகிறது. இங்கிருந்து ஒரு மதகில் திண்டல் ஏரி பக்கமும், மற்றொரு மதகில் இருந்து காரிமங்கலம் பெரியேரி பக்கம் உள்ள ஏரிகளுக்கும், தண்ணீர் பிரிந்து செல்லும் வகையில் இரு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. கேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போது, திண்டல் ஏரிக்கும், அதன் கீழ் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது. மணிக்கட்டியூர் மதகிலிருந்து சிறிது தொலைவிலேயே, எச்சனம்பட்டி ஏரி உள்ளது.

ஆனால், இதுநாள் வரை இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. எச்சனம்பட்டி ஏரி நிரம்பினால், இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மேலும், நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்து, குடிநீர் பிரச்னையும் தீரும். எனவே, எச்சனம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சரி செய்து, தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : dam ,KRP ,Echanampatti Lake ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...