×

தர்மபுரி அருகே அரசு பள்ளியில் ஒரே நாளில் 50 மாணவர்கள் சேர்க்கை

தர்மபுரி, அக்.10: தொப்பூர் உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 230 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் நரசிம்மன் உள்ளிட்ட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். விஜயதசமியை முன்னிட்டு நேற்று முன்தினம், இப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை நடந்தது. ஒரே நாளில் 50 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சரஸ்வதி படத்தின் முன்பு, அரிசியில் அருகம்புல் மூலம் அம்மா, அப்பா வார்த்தைகள், கையை பிடித்து எழுதப்பட்டது. ஒரேநாளில் 50 மாணவர்களை பள்ளியில் சேர்த்தமைக்காக, நல்லம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன், ஜீவா, ஜெகன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.

அதை தொடர்ந்து, குழந்தைகள் பாராளுமன்ற அமைச்சரவை பதவியேற்பு விழா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ஊர் கவுண்டர் ராஜூ, மாதையன், ஊர்நாயக்கர் பன்னீர்செல்வம், போலீஸ் எஸ்ஐ சிவன், பள்ளி மேலாண்மை குழு தலைவி அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நரசிம்மன் வரவேற்றார். நிகழ்ச்சியில், மாணவர் மன்ற தலைவராக 8ம் வகுப்பு மாணவி கிருத்திகா, துணைத்தலைவராக 6ம் வகுப்பு மாணவர் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்று கொண்டனர். மேலும், 14 துறைகளை சேர்ந்த கேபினட் மற்றும் இணை அமைச்சர் பதவியேற்றனர். துறைத்தலைவர்களாக ஆசிரியர்கள் எழிலரசி, ராதாகிருஷ்ணன், நிர்மலா ரோஸ்லின், புஷ்பா, ஜெயபாரதி, செண்பகம், ரோஸ்லின் மற்றும் சுதா ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.

Tags : government school ,Dharmapuri ,
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...