×

சித்தேரி ஊராட்சியில் சாலை, பஸ் வசதியின்றி தவிக்கும் மலை கிராம மக்கள்

தர்மபுரி, அக்.10:  சித்தேரி ஊராட்சியில், 40 மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், பஸ் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்தேரி ஊராட்சியில் சித்தேரி, பேரேரி புதூர், கொண்டம்பட்டி, சூரியக்கடை, சூளிக்குறி, தேக்கல்பட்டி, கலசப்பாடி, செங்காடு, மாம்பாறை, கருக்கம்பட்டி, ஆலமரத்துவளைவு, அழகூர், மோட்டுவளவு, குண்டல்மடுவு, எருமைக்காடு, நலமாங்கடை உள்ளிட்ட 62 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களில் 10,364 பேர் வசிக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 3,600 அடி உயரத்தில் உள்ள சித்தேரி மலைக்கிராமத்தில், விவசாயம் மற்றும் தேன் சேகரித்தல் போன்ற தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், அன்டை மாநிலங்களுக்கு கூலிவேலை செய்ய பலர் சென்று விட்டனர். அரூரில் இருந்து சித்தேரி, சூரியக்கடை வரை 13, 25, 27 ஆகிய எண் கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. விஷேச நாட்களில் இந்த பஸ்களும் முன்னறிவிப்பு இன்றி திடீரென நிறுத்தப்படுகிறது. இதனால், மலை கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து சித்தேரி மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘சித்தேரி ஊராட்சியில் 62 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில், வெள்ளாம்பள்ளி, தேக்கல்பட்டி, அலபூர் ஜக்கம்பட்டி, மிதிக்காடு, எருமைக்கடை, கல்நாடு, அரசநத்தம், கலசப்பாடி, கருத்தம்பட்டி உள்ளிட்ட 40 மலை கிராமங்களில் சாலை வசதியே கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் சேற்றிலும், சகதியிலும் செல்லும் நிலை உள்ளது. இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதனால், சாலை அமைக்க வனத்துறை அனுமதிக்காமல் உள்ளது. வனத்துறை அனுமதி பெற்று அனைத்து மலைக்கிராமங்களிலும், தார்சாலை அமைத்து இணைக்க வேண்டும். சித்தேரி ஊராட்சியைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் அதிகம் பேர் வேலை செய்கின்றனர். உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை கிடைக்க விவசாயம் மற்றும் மிளகு, ஏலக்காய் சாகுபடி பண்ணைத்தொழில் செய்ய பயிற்சி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : village ,Chittari ,road ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...