×

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.21 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பயணிகளிடம் விசாரணை

ஏர்போர்ட், அக்.10: திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்திய விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த பயணியான கியாவுல் ஹக்கின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரப்பர் வடிவிலான பொருட்களிலிருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 362 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானம் ஒன்று மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இளையான்குடியை சேர்ந்த பயணி ரியாஸ்கான் எடுத்து வந்த 100 கிராம் எடையுள்ள தங்கம் அவரது உள்ளாடைகளில் இருந்து மீட்கப்பட்டது. மேலும் அவர் கொண்டு வந்திருந்த பானாசோனிக் வானொலியில் இருந்து 337 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. மொத்தம் ரூ.17 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 447 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இரு பயணிகளிடமிருந்தும் மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : passengers ,airport ,Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...