×

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு

மஞ்சூர், அக். 10:   நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசின் கூட்டுறவு வணிக துறையின் கட்டுபாட்டில் மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, குந்தா, மேற்குநாடு, இத்தலார், நஞ்சநாடு, மாகலிங்கா, கைகாட்டி, கரும்பாலம், கட்டபெட்டு, எப்பநாடு, சாலீஸ்பரி, பிதர்காடு, பிரான்டியர், பந்தலுார் ஆகிய பகுதிகளில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இத்தொழிற் சாலைகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல ஆண்டாக போராடி வருகின்றனர்.  மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 14ம் தேதி குன்னூரில் உள்ள இன்கோ சர்வ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆல்துரை கூறியதாவது: கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் சம்பந்தமாக 36 ஆண்டுகளாக நடக்கும் வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்து கொண்டு வழக்கை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடியும் வரை தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச தினக்கூலி ரூ.600 மற்றும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பணிகள் வழங்குவதுடன் படித்த, அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை டீ மேக்கர் உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்க வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளிலும் இரவு நேரப்பணிக்கு பெண்களை கட்டாயப்படுத்துவதை கைவிடுவதுடன் பாலியல் புகார் பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மேலும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கல்வி கடனை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு தொழிற்சாலை அங்கத்தினர் விநியோகம் செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய காலத்தில் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 14ம் தேதி சிஐடியு சார்பில் குன்னூர் இன்கோ சர்வ் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Tags : siege struggle ,
× RELATED தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்