×

பெரம்பலூர் வாரச்சந்தையில் தகராறு கடை வாடகை வசூல் செய்பவர் தாக்கியதில் வியாபாரி படுகாயம்

பெரம்பலூர், அக்.10: பெரம்பலூர் வாரச் சந்தையில் ஏலதாரரின் சார்பாக கடை வாடகை வசூலில் ஈடுபட்டவர் தாக்கியதால் படுகாயமடைந்த வியாபாரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரம்பலூர் வாரச்சந்தை வடக்குமாதேவி சாலையில் இயங்கிவரும் உழவர் சந்தையின் அருகே நடந்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகளை, கீரை, பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக முன்பதிவு செய்து கடை நடத்துவோரிடம் வாராவாரம் வாடகைப் பணம், வாரச் சந்தையை ஏலம் எடுத்தவரால் வசூலிக்கப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினமும் வாரச் சந்தை இயங்கியது. இந்த வாரச் சந்தையை ஏலம் எடுத்தவர் சார்பாக, பெரம்பலூர், மேரிபுரம், ராசி திருமண மண்டபம் அருகே வசிக்கும் வெங்கடேசன் மகன் ராமச்சந்திரன் (35) என்பவர் வாடகைக் கட்டணத்தை வசூலித்துக் கொண்டிருந்தார். இதில் தரைக்கு ரூ100ம், லைட் போட்டால் கூடுதலாக ரூ.50 என ரூ.150ஐ செலுத்த வேண்டும்.

நேற்றுமுன்தினம்இரவு சந்தை முடியும் நேரத்தில் வாடகை வசூலித்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன், வாரச்சந்தையில் கடை நடத்திய தேங்காய் கடை வியாபாரியான, திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, மந்தம்பட்டியைச் சேர்ந்த காத்தமுத்து மகன் மணிமாறன்(52) என்பவரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது மணிமாறன், வியாபாரம் சரியாக ஓடவில்லை எனக் கூறி ரூ.50ஐ மட்டும் கொடுத்துள்ளார். இதனால் ராமச் சந்திரனுக்கும், மணிமாற னுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. இதில் வாடகை வசூலிக்கும் ராமச்சந்திரன், தேங்காய் கடை வியாபாரி மணிமாறனை கல்லால் அடித்து எட்டி உதைத்துக் கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் காயமடைந்த மணிமாறனை அருகில் இருந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனால் வாரசந்தையில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் சப்.இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு ப்பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags : Dealer ,dispute ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...