×

குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மணி நேரம் காத்திருந்த விவசாயிகள்

ஈரோடு, அக்.10: ஈரோட்டில் வனத்துறை சார்பில் நேற்று நடந்த வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த தாமதமானதால் 2 மணி நேரமாக விவசாயிகள் காத்திருந்தனர். அதன்பின், மதியம் 1 மணியளவில் கூட்டம் நடத்தப்பட்டது. வனத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்படுவது தொடர்பாக முறையாக விவசாயிகளுக்கு தகவல் கொடுக்காததால் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக, வருவாய் கோட்ட அளவில் வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் நடக்கும் வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் மலைப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வனத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  விவசாயிகளின் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூர் வனக்கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் நேற்று காலை 11 மணிக்கு 3 வனக்கோட்ட அலுவலகத்திலும் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் காலை 11 மணிக்கு வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போதிய அறிவிப்பு இல்லாத நிலையில் விவசாயிகள் 7 பேர் மட்டும் காலை 10.45 மணிக்கு வந்து சேர்ந்தனர். கூட்டம் நடத்தும் அரங்கு திறக்கப்படாததால் சிறிதுநேரம் காத்திருந்தனர். பின்னர், கூட்ட அரங்கை திறந்து விவசாயிகளை அமர வைத்தனர். ஆனால், கூட்டம் துவங்கவில்லை. நீண்ட நேரம் விவசாயிகள் காத்திருந்து கிளம்ப தயாராகினர். அப்போது, மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் வந்து கொண்டிருப்பதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து மதியம் ஒரு மணிக்கு கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட விவசாயிகளும் கடமைக்காக பேசி விட்டு சென்றனர். அடுத்த கூட்டத்தையாவது திட்டமிட்டப்படி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : peasants ,grievance meeting ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி...