×

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் பாதுகாப்பு பணி தீவிரம்


ஈரோடு, அக். 10: தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மார்க்கமாக வந்து செல்லும் ரயில்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் ரயிலில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், பண்டிகையையொட்டி பயணிகள் அதிகளவில் ரயிலில் பயணிப்பர். இதில், ஈரோடு ரயில் நிலையம் மார்க்கமாக வந்து செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் தற்போது இருந்தே அதிகரிக்க துவங்கி உள்ளது. பயணிகள் மற்றும் அவரது உடமைகள் பாதுகாப்பிற்காக ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 இதுகுறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜேந்திர குமார் மீனா கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் பயணிகளின் உடமைகள், குறிப்பாக பெண்களிடம் செயின் பறிப்பு,  திருட்டு போன்ற சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுவார்கள். ஆகையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு வந்து செல்லும் ரயில்களிலும், ஜங்ஷன் பகுதியிலும் ஆர்பிஎப், ரயில்வே போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.  தற்போதே பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், ஓடும் ரயில்களிலும், சேலம்-ஈரோடு-கோவை வழித்தடங்களில் இரு மார்க்கத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பட்டாசுகளை கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்குகள் பதிந்து அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது