×

வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ் ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், அக். 10: கரூர் வெங்கமேடு மேம்பாலத்தின்கீழ் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் சம்பவத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வெங்கமேடு செல்லும் சாலையின் குறுக்கே தண்டவாளப் பாதை குறுக்கிடுகிறது. கரூரில் இருந்து வேலூர், மண்மங்கலம், வெங்கமேடு, சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த பகுதியின் வழியாக சென்று வந்தன.ரயில் குறுக்கிடும் போதெல்லாம் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்று வந்தன. இதன் காரணமாக, இந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனடிப்படையில், மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலம் கட்டப்படும் போதே, பாதசாரிகள் பால ஓரத்தில் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பணி முழுமை பெறாமல் உள்ளது.இந்நிலையில், மேம்பால பகுதிக்கு எதிரே உள்ள வெங்கமேடு பகுதியை சுற்றிலும் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இதில், பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதன் காரணமாக, சில சமயங்களில் விபத்து சம்பவமும் நடைபெற்றது.இதனை கட்டுப்படுத்தும் வகையில், கரூர் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டும், பொதுமக்கள் இதனை கண்டு கொள்ளாமல் தண்டவாளத்தை கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுத்து நிறுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

Tags : Residents ,railway track ,Venkamedu ,
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...