×

தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி, அக். 10: தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி முன்னாள் செயலாளர் சி.எஸ். ராஜேந்திரன், மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநர் டி.ஆர்.தமிழரசு கூட்டாக தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடியில் கூறுகையில், ‘‘தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வடதிசை இந்து நாடார்களினுடைய தர்மக் காரப்பேட்டை பரிபாலன சங்கம், விருதுநகர் இந்து நாடார்கள் தர்ம பரிபாலன சபை, தூத்துக்குடி நாடார்கள் மகமை, திருமங்கலம் பாண்டியகுல ஷத்திரிய நாடார்கள் உறவின்முறையை சேர்ந்த தூத்துக்குடி மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை இந்துநாடார்கள் பெண் பாடசாலை மகமை ஆகிய 5 நாடார்கள் மகமையாலும், சமுதாய பெரியோர்களாலும் கடந்த 1966ல் தூத்துக்குடி கல்விக்குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம்தான் காமராஜ் கல்லூரியாகும்.

இந்த 5 அமைப்புகளிலிருந்தும் மற்றும் கல்லூரியை உருவாக்க நிதியுதவி அளித்தவர்கள், ஸ்பின்னிங்மில் நிறுவனம், உப்பு இலாகா ஆகியவற்றில் இருந்து 52 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நிர்வகித்து வருகின்றனர். இதில் தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தை சேர்ந்த 20 பேரும், விருதுநகர் இந்து நாடார்கள் தர்மபரிபாலன சபையை சேர்ந்த 10 பேரும், தூத்துக்குடி நாடார்கள் மகமையை சேர்ந்த 3 பேரும், திருமங்கல பாண்டிய குல சத்திரிய நாடார்கள் உறவின்முறையை சேர்ந்த தூத்துக்குடி மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறையை சேர்ந்த 2 பேரும், அருப்புக்கோட்டை இந்து நாடார்கள் பெண் பாடசாலை மகமை பரிபாலன சங்கத்தை சேர்ந்த ஒருவரும், நன்கொடையாளர்கள் 10 பேரும், தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பில் 4 பேரும், உப்பு இலாகாவை சேர்ந்த ஒருவரும், கல்லூரி முதல்வர் நியமிக்கும் ஒருவர் என 52 பேர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களிலிருந்து தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி 1966 முதல் 2015ம் ஆண்டு வரை தூத்துக்குடி கல்விக்குழு மற்றும் கூட்டுறவு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டும், 5 நாடார்களின் மகமைகளின் துணையோடும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் காமராஜ் கல்லூரி முழுவதையும் தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக விதிகளுக்கு எதிராக, தன்னிச்சையாக தேர்தல் நடத்தி கல்லூரியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இந்த தேர்தலை மாவட்டப் பதிவாளர் ஏற்கவில்லை. இதனால் கல்லூரிக்கு செயலாளர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விருதுநகர் இந்து நாடார்கள் தர்ம பரிபாலன சபை சார்பில் தூத்துக்குடி சப் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்ற இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாரிமன், ராமசுப்பிரமணியன் ஆகியோர் காமராஜ் கல்லூரியை நிர்வாகம் செய்யும் தூத்துக்குடி கல்விக்குழு தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உத்தரவிட்டது. மேலும் இதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த வக்கீல் சொர்ணலதாவை ஆணையராக நியமித்து, 2 மாதங்களுக்குள் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு பொதுக்குழு, செயற்குழுவை கூட்டியும், புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்’’ என்றனர்.  
பேட்டியின் போது நாடார்கள் மகமைகளை சேர்ந்த தேன்ராஜ், தனபாலன், வேல்சங்கர்,  நடராஜன், பீட்டர் ஜெபராஜ், நிர்மல்வேல், செல்வராஜ், சுசீ ராஜன், என்.டி.செல்வராஜ், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Supreme Court ,administrators ,Thoothukudi Kamaraj College ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் விவகாரம் திமுகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு