×

ஏழை மக்கள் விரும்பும் எடப்பாடி ஆட்சி அதிமுக அரசை அசைக்க முடியாது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

களக்காடு, அக். 10:  தமிழகத்தில் ஏழை மக்கள் விரும்பும் எடப்பாடி ஆட்சி நடந்து வருகிறது. அதிமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக களக்காடு ஒன்றிய பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். சிங்கிகுளம் கிராமத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமையில் அதிமுக நிர்வாகிகள் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். கிராம மக்களிடத்தில் குறைகளை கேட்டறிந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்கள் விரும்பும் ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தும் ஆட்சி நடைபெற்று வருகின்றது. பட்டாளிகள், படைப்பாளிகள், நெசவு தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகின்றார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல், இடைத்தேர்தல் என்பது மத்தியில் யார் பிரதமராவது மோடியா அல்லது ராகுலா? தமிழகத்தை எடப்பாடியார் ஆள்வதா? ஸ்டாலின் ஆள்வதா? என்பதற்கான தேர்தல். நாடு முழுவதும் மோடியே பிரதமராக வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என மகத்தான தீர்ப்பை அளித்தனர். மக்கள் ஆதரவு இருப்பதால் அதிமுக ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது.
களக்காடு பகுதி கிராமங்கள் சூழ்ந்த பகுதி. இது அதிமுகவின் கோட்டையாகும். எந்த தொழிலாக இருந்தாலும் எடப்பாடியார் ஆட்சியால் எந்த தொந்தரவும் கிடையாது. அதிமுக ஆட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களையும் வாக்காளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் நாராயணன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்.  இந்த தொகுதியை நன்றாக வைத்துக் கொள்வார். களக்காடு பகுதி கிராமங் களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்ககப்படும். இவ்வாறு பேசினார். பிரசாரத்தில் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணன், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், களக்காடு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயராமன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : KD Rajendrapalaji ,government ,AIADMK ,
× RELATED அரசின் அறிவுரையை கடைபிடித்தால்...