×

களக்காட்டில் தசரா விழா கோலாகலம் 12 சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி

களக்காடு, அக். 10: களக்காட்டில் தசரா விழாவை முன்னிட்டு 12 சப்பரங்கள், ஒரே இடத்தில் காட்சி கொடுத்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம், களக்காட்டில் ஆண்டுதோறும் தசரா விழாவை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு தசராவின் 10ம் நாளான நேற்று முன்தினம்   விழா கோலாகலமாக நடந்தது. இரவு 8 மணிக்கு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்மன், வரதராஜ பெருமாள் முதல் காட்சி அளித்தனர்.
இரவு 9 மணி முதல் சப்பரங்கள் சத்தியவாகீஸ்வரர் கோயில் முன் வரத் துவங்கின. இரவு 11.30 மணிக்கு பாரதிபுரம் உச்சிமாகாளி அம்மன் கோயில், வடக்குமாடவீதி கற்பகவள்ளி அம்மன் கோயில்,  நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோயில், விஸ்வகர்மா தெரு ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில், கழுகேற்றி முக்கு ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், கோவில்பத்து ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில், கோவில்பத்து துர்கா பரமேஸ்வரி அம்மன் கப்பலோட்டிய தமிழன் தெரு ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் ஆகிய 10 கோயில்களில் இருந்து வந்திருந்த 10 அம்மன் சப்பரங்களும் ஒரே இடத்தில் மேற்கு நோக்கி அணிவகுத்து நின்றன.

தொடர்ந்து இரவு 11.40 மணிக்கு மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை நினைவு கூறும் வண்ணம் கற்பகவள்ளி   அம்மன் சூரனை வதம் செய்தார். இதையடுத்து இரவு 12 மணிக்கு சத்தியவாகீஸ்வரர் - கோமதி அம்மன், வரதராஜபெருமாள் சுவாமிகள் அம்மன்களுக்கு நேர் எதிரே கிழக்கு நோக்கி நின்று அம்மன்களுக்கு காட்சி அளித்தனர். அனைத்து அம்மன்களுக்கும் பட்டு வஸ்திரங்கள், தீர்த்தங்கள் வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து சப்பரங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 12 சப்பரங்களும் கண்களை கவரும் வகையில் பலவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. 12     சப்பரங்களும் ஒரே இடத்தில் காட்சி அளித்ததை காண களக்காடு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பக்தர்களின் உற்சாக ஆட்டம் பாட்டத்துடன் தசரா விழா களை கட்டியது. பின்னர் அம்மன்  தங்களது கோயில்களுக்கு ரதவீதிகள் வழியாக புறப்பட்டு சென்றனர். ரதவீதிகளில் சப்பரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் புடைசூழ, செண்டை மேளங்கள் முழங்க அணிவகுத்து சென்றன. ஏற்பாடுகளை தசரா விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : festival ,kolakkadam kalakadam ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...