×

ஊத்துக்கோட்டை கோயில்களில் நவராத்திரி விழா கொண்டாட்டம்

ஊத்துக்கோட்டை, அக். 10:  ஊத்துக்கோட்டையில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் நவராத்திரி விழா  கொண்டாடப்பட்டது.ஊத்துக்கோட்டை பிராமணர் தெருவில்  சுந்தரவல்லி சமேத அழகிய  சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில்  அஷ்டலட்சுமி நவராத்திரி விழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதில், முதல் நாள் மகாலட்சுமி, 2ம் நாள் தனலட்சுமி, 3ம் நாள் தானிய லட்சுமி, 4ம் நாள் சந்தான லட்சுமி, 5ம் நாள் தைரிய லட்சுமி, 6ம் நாள் விஜயலட்சுமி, 7வது நாள் கஜலட்சுமி,  8வது நாள் வித்யா லட்சுமி, 9ம் நாள் சரஸ்வதி,  கடைசியாக 10வது நாள் பெருமாள் தாயார் என 10 நாட்கள் பூஜை நடைபெற்றது. மறுநாள்  சுந்தரவல்லி - வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.

இந்த, நவராத்திரி பூஜைகளை முன்னிட்டு தினமும் காலை ஸ்ரீ சுந்தரவல்லி சமேத சுந்தரவரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நவராத்திரி பூஜையில் தினமும் தீபாராதனை, ஊஞ்சல் சேவை உள்ளிட்டவையும், பக்தர்களின் பஜனையும், சிறுமிகளின் பரதநாட்டியமும் நடைபெற்றது.இதேபோல்,  ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி 29ம் தேதி முதல் தினமும் காலையில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன்,  வள்ளி - தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.  பின்னர், மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி, மகிஷாசுர மர்த்தினி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
 விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags : Navratri Festival ,Uthukkottai Temples ,
× RELATED ஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்