×

பெரியபாளையம் அருகே பரபரப்பு டிரான்ஸ்பார்மருக்கு மலர் வளையம் வைத்து பொதுமக்கள் நூதன போராட்டம்


ஊத்துக்கோட்டை, அக்.10: பெரியபாளையம் அருகே பழுதான மின்சார  டிரான்ஸ்பார்மருக்கு மலர் வளையம் வைத்து மக்கள்  போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகாமையில் இரண்டு மின்சார  டிரான்ஸ்பார்மர்கள் அருகருகில் உள்ளது. இதன் தூண்கள் பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த வழியாக  பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், ரேஷன் கடைக்கு செல்லும் பொது மக்களும் இந்த டிரான்ஸ்பார்மரை கடந்துத்தான் செல்லவேண்டும்.
மேலும், இந்த டிரான்ஸ்பார்மர் உள்ள இடம் மிகவும் தாழ்வாக உள்ளதால், மழை காலங்களில் மழை நீர் தேங்கும். அதில் மின்சாரம் கசிய நேரிட்டால் மக்கள் மீது மின்சாரம் பாயும் அபாய நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி மாளந்தூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின் கம்பிகள் பல ஆண்டுகளாக மாற்றாததால் அறுந்துவிழும் நிலையில் உள்ளது. இந்த, மின் கம்பிகளை மாற்றி புதிய மின்கம்பிகளை அமைக்க வேண்டும். உயர்மின் அழுத்த கம்பிகள் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக வீடுகளுக்கு மேல் செல்வதை மாற்றி தர வேண்டும் என பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பழுதடைந்த மின்சார டிரான்ஸ்பார்மருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம்  நேற்று நடைபெற்றது. இதற்கு வட்ட குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார்.  முன்னதாக மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.கண்ணன், பாலாஜி, கங்காதரன், மாதர் சங்க நிர்வாகி ரமா உட்பட ஏராளமான பெண்கள் கிராமத்தின் எல்லையில் இருந்து  ஊர்வலமாக சென்று டிரான்ஸ்பார்மருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கோஷங்களை எழுப்பினர்.  

 தகவலறிந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய உதவிப்பொறியாளர் குமரகுரு சம்பவயிடத்திற்கு வந்தார். அவரிடம்,  பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வேறு இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும். அத்துடன் பழுதடைந்த கம்பங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர். இதை கேட்ட மின்வாரிய அதிகாரி, உயர் அதிகாரிகளிடம் பேசி பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க உரிய    நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்

Tags : Public Flower Ring ,Parayapalayam ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...