×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு டாக்டர்களுக்கு சரமாரி அடி, உதை 2 போதை ஆசாமிகள் கைது

செங்கல்பட்டு, அக்.10: செங்கல்பட்டு மருத்துவமனைக்கு, காயங்களுடன் வந்த போதை ஆசாமிகள், டாக்டரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு  இருவரும் தலை, கைகளில் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர்கள், ‘‘எப்படி காயம் ஏற்பட்டது’’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள். ‘‘அதெல்லாம் சொல்ல முடியாது. சிகிச்சை மட்டும் செய்தால் போதும்’’ என கூறியுள்ளனர். அதற்கு டாக்டர் பெயர்,  ஊர், முகவரி சொல்லுங்கள் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், ‘‘விளக்கமெல்லாம் சொல்ல முடியாது. உடனே வேலையப்பாரு’’ என்று கூறியதுடன், பெண் டாக்டரை சரமாரியாக அடித்து கீழே தள்ளினர்.

இதை பார்த்ததும், பணியில் இருந்த மற்றொரு ஆண் டாக்டர் விரைந்து வந்து,  போதை ஆசாமிகளை தடுத்தார். அவருக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள், 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போதை ஆசாமிகள் 2 பேரையும், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், திருக்கழுக்குன்றம் அடுத்த பேர்மபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (25). இவரது நண்பர் பூபாலன் (24). நண்பர்கள். இருவரும் குடி போதையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் காயம் ஏற்பட்டது தெரிந்தது.இதற்கிடையில், பணியில் இருந்த டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம், தீப்போல் பரவியது.  இதனால் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து டாக்டர்கள், செவியிலியர், மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் இரவு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்திய மருத்துவர் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி  மாணவர்கள் சங்கம், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு, டாக்டரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தொடர்ந்து டாக்டர்கள்  மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து கோஷமிட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் அரிகரன், செங்கல்பட்டு டவுன் இஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின்  ஆகியோர் போராட்டத்தி ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், தொடர்ந்து டாக்டர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஆனால் தாக்கியவர்கள் மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 24 மணிநேரம் மொபைல் போலீஸ்  அமைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.
மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இன்று சட்டமன்ற முற்றுகை அல்லது மருத்துவக் கல்வி இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என கூறினர்.

Tags : Doctors ,Chekkalpattu Government Hospital ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை