×

பிரதமர் - சீன அதிபர் வருகை எதிரொலி கோவளம் முதல் கல்பாக்கம் வரை மீன் பிடிக்க தடை

சென்னை, அக். 10: மாமல்லபுரத்துக்கு பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையால், கோவளம் முதல் கல்பாக்கம் வரையில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் விளங்குகிறது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை மற்றும் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகின்றனர். அவர்கள்,  மாமல்லபுரத்திலுள்ள முக்கிய புராதான சின்னங்களான அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை ஆகியவைகளை பார்வையிடுகின்றனர். பின்னர், இந்தியா - சீனா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளனர். இரு தலைவர்கள் மாமல்லபுரம் வரவுள்ளதையடுத்து, அங்கு போலீசார் உச்ச கட்ட பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாமல்லபுரம் கடல் பகுதியில் கடற்படை பாதுகாப்பு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் குதிரை படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.      

சீன நாட்டு அதிபரை வரவேற்கும் வகையில் சீன மொழியில் வரவேற்பு பலகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் முகப்பு வாயிலில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டு உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். 15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக மாமல்லபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவளம் முதல் கல்பாக்கம் வரை இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்ததில், மாமல்லபுரம் நகரமே போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : President ,Chinese ,Echo ,
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்