×

செங்கல்பட்டு தசரா விழா நிறைவு

செங்கல்பட்டு, அக். 10: நவராத்திரியை முன்னிட்டு செங்கல்பட்டில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு தசரா விழா, செங்கல்பட்டு சின்னக்கடை வீதியில் கடந்த 28ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதைதொடர்ந்து சின்னக்கடை, பூக்கடை, பெரிய நத்தம், ராமபாளையம், சின்னரத்தினம் செட்டி தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, ஓசூர் அம்மன் கோயில் தெரு, பெரிய நத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோயிலில் 9 நாட்கள் கொலு வைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு  துர்க்கை வேடமிட்டு 13 திருத்தேர்களும் செங்கல்பட்டு நகரில் வீதியுலா வந்து சின்னக்கடை வீதியில் அணிவகுத்து நின்றன.
நேற்று அதிகாலை வன்னிமரத்தில் அம்பு எய்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம், வந்தவாசி, உத்திரமேரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர். இன்று சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து நிறைவு விழா பெறுகிறது.

விழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கான ராட்டினம், பல்வேறு பொழுதுபோக்கு சாதனங்கள் விற்கும் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு தசரா விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Chengalpattu Dasara Festival ,
× RELATED கோலாகலமாக தொடங்கிய செங்கல்பட்டு தசரா...