×

வாலாஜாபாத் பேரூராட்சியில் அவலம் இணைப்பு பாதை இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீர்

வாலாஜாபாத், அக்.10: வாலாஜாபாத் பேரூராட்சி சேர்க்காடு பகுதியில், 10க்கும் மேற்பட்ட தெருக்களில், 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், அதிக வீடுகள் கொண்ட செங்கழுநீர் விநாயகர் கோயில் தெருவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது இந்த கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த கால்வாயில் விடப்படுகிறது.இந்த தெருவின் கடைசி பகுதி தாழ்வாக உள்ளதாலும், இந்த தண்ணீர் செல்ல வழி இல்லாததாலும், இந்த பகுதியில் கழிவு நீர் வெளியேறி, சாலையிலேயே குளம்போல் தேங்கிவிடுகிறது. இதையொட்டி, தெருவில் செல்லும் வாகனங்களால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால், சுற்றுவட்டார வீடுகளில் உள்ள மக்கள், வெளியே நடமாட முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீரும் கழிவுநீரில் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள மழைநீர் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும், இந்த செங்கழுநீர் விநாயகர் கோயில் தெருவில் தஞ்சம் அடைகின்றன. இங்கு இணைப்பு கால்வாய்கள் இல்லாததால், ஆண்டு முழுவதுமே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், துர்நாற்றம் கொசு தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது டெங்கு காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியிலும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, சிலர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வப்போது, இப்பகுதிக்கு வந்து கால்வாய்களை சுத்தம் செய்வார்களே தவிர, கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.எனவே, பேரூராட்சி ஊழியர்கள், சாலையில் குளம்போல் உள்ள கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,Walajabad ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...