×

பாலத்தில் ஷட்டர் இல்லாததால் மணல் மூட்டைகளுடன் போராடும் விவசாயிகள்

மன்னார்குடி, அக்.10: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் அருகே பாமணியாற்றில் இருந்து தேக்கிடுத்தான் பாசன வாய்க்கால் பிரிந்து பல கிராமங்களுக்கு பாசன வசதியை தருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து பல கிளை வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. அவ்வாறு பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்களில் ஒன்றான பெருவை வாய்க்காலில் மண்ணுக்குமுண்டான் ஊராட்சி ஏரிக்கரை ஒத்தக்கடை அருகே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் வழியாக செல்லும் தண்ணீரை கொண்டு கர்ணாவூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் தங்களின் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை பெறுகின்றனர். அதிகம் மழை பெய்யும் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் இந்த ஏரிக்கரை பெருகவாழ்ந்தான் பகுதியின் வடிகாலாகவும் பயன்படுகிறது.

இப்பாலத்தில் ஷட்டர் வசதி இல்லாததால் சாகுபடி காலங்களில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலத்தின்கீழ் கிழக்கு பகுதிக்கு ஓடும் தண்ணீரை மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்தால் தான் கர்ணாவூர் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இல்லாவிட்டால் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி காலங்களில் தண்ணீருக்காக ஏராளமான அளவு செலவு செய்து 300க்கு மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி அதன் மூலம் தண்ணீர் பெற வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே விவசாயிகளில் நலன் கருதி இப்பாலத்தின் மேற்கு பகுதியில் ஷட்டர் ஒன்றை அமைத்து அதன் மூலம் கர்ணாவூர் ஊராட்சியில் உள்ள நிலங்களில் சாகுபடி பணிகளுக்காக தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!