×

கொரடாச்சேரியில் பயிர்காப்பீடு இழப்பீடு வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் கைது

திருவாரூர், அக்.10: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ம்தேதி வீசிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை உட்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இழப்பீடு தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காமல் ஒரு பகுதி விவசாயிகளுக்கு விடுபட்டு உள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 573 வருவாய் கிராமங்களில் 357 கிராமங்களுக்கு மட்டுமே இந்த பயிர் காப்பீடு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க கோரி கடந்த 5ம்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரம், பெருமாளகரம், திருக்களம்பூர், பத்தூர், ஆர்ப்பாவூர், கீழபாலையூர், வளவநல்லூர் உள்பட விடுபட்டு போன அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்கிட கோரி தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர் நேற்று கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தஞ்சை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நலச்சங்க தலைவர் சேதுராமன் மற்றும் பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, வைத்தியநாதன், கோபால், சத்தியமூர்த்தி, பக்கிரிசாமி, ரவிச்சந்திரன் உள்பட மொத்தம் 50 விவசாயிகளை கொரடாச்சேரி போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...