×

பொன்னமராவதில் வட்டார அளவில் மாணவர்கள் அறிவியல் படைப்பு கண்காட்சி

பொன்னமராவதி,அக்.10: பொன்னமராவதியில் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியினை வட்டாரக்கல்வி அலுவலர் ராஜாசந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் பால்டேவிட் ரோசாரியோ, ஒன்றிய மேற்பார்வையாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள கட்டையாண்டிபட்டி, பிச்சங்காலன்பட்டி, கண்டியாநத்தம், கல்லம்பட்டி, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, செம்பூதி, மரவாமதுரை உள்ளிட்ட 18 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை இந்த அறிவியல் கண்காட்சியில் சமர்பித்தனர். பொன்.புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாராயணி, ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேசன், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சந்திரமோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை தரமதிப்பீடு செய்தனர்.

இதில் கீழத்தானியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கோபிகா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலிடத்தையும், வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெங்கடேசன், சரவணன் ஆகியோர் இரண்டாமிடத்தையும், நெறிஞ்சிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நிஸ்வான், நிர்மலா ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர். இந்த அறிவியல் கண்காட்சியினை ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

Tags : Science exhibition ,Ponnamaravattu ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது