×

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்ட மணல் திடீர் மாயம்

அறந்தாங்கி, அக்.10: நாகுடி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக மணல் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜா புயலின் போது இருப்பு வைக்கப்பட்ட மணல் மாயமானது. இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், சமூக ஆர்வரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல், வெள்ளம் காலங்களில் ஏரி, குளங்களில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டால், அதை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க பொதுப்பணித்துறை அலுவலகங்களிலும், சாலைகளில் உடைப்பு ஏற்பட்டால் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களிலும் மணல் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். கடந்த கஜா புயல் காலத்தில் ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், நாகுடி பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மணல் இருப்பு வைக்கப்பட்டது. கஜா புயல் ஏற்பட்ட காலத்தில் ஏரி, குளம், சாலைகளில் உடைப்பு ஏற்படாததால், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்ட மணல் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இன்று வரை மணல் மூடைகள் இருக்கும் நிலையில், நாகுடி கல்லணைக்கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மணல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனது. இந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டால், கடந்த ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட மணல் எங்கே என உயர் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கேள்வி கேட்பார்கள் என்று எண்ணிய நாகுடி பொதுப்பணித்துறையினர், சட்டவிரோதமாக மணல் அள்ளும் கும்பல் மூலமாக 16 லோடு மணலை வெள்ளாற்றில் இருந்து கொண்டு வந்து இருப்பு வைத்துள்ளனர்.

அவசர தேவைக்கு அரசு மணல் குவாரியில் இருந்து மணல் வாங்காமல், திருட்டு மணல் கும்பலிடம் இருந்து மணல் வாங்கியபோது, அந்த மணலை இறக்கிய திருட்டு மணல் கும்பல், பொதுப்பணித்துறையின் பெயரை பயன்படுத்தி சட்டவிரோதமாக பல ஆயிரம் மதிப்பிலான 26 லோடு மணலை சட்டவிரோதமாக கடத்தியதும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, திருட்டு மணலை வாங்கி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sand dunes ,premises ,Public Works Office ,
× RELATED வால்பாறையில் பொதுப்பணித்துறை வளாகத்தில் புதர் காடுகளில் காட்டு தீ