×

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் திருநள்ளாறில் வாயிற் கூட்டம்

காரைக்கால், அக்.10: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் வாயிற் கூட்டம் நடைெபெற்றது. நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு உள்ளாட்சித்துறையின் ஊதிய கணக்கின் கீழ் அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த 1.1.2016 முதல் எந்தவித நிபந்தனையுமின்றி நிதி பலன்களை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள வீட்டு வாடகைப்படி மற்றும் போக்குவரத்து படியை கடந்த 1.7.2017 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த 2014-15 ஆண்டு முதல் 2018-19 வரை 5 ஆண்டுகளுக்கு உண்டான நுழைவு வரிக்கு ஈடான மானியத்தொகையில் மீதமுள்ள தொகைகளை சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கும், வீட்டு வரிக்கு ஈடான மானியத்தொகைகளை சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் வழங்க வேண்டும், பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உச்சவரம்பின்றி ஊழியர்கள் இறந்துபோன 90 நாட்களுக்குள் அவரவர் கல்வி தகுதிக்கேற்ப நிரந்தர பணியினை வழங்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த சம்மேளன நிர்வாகிகளை உள்ளாட்சித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து இன்று வரை வழங்கவில்லை.

எனவே புதுச்சேரி அரசையும், உள்ளாட்சித்துறையையும் கண்டித்து வரும் 4.11.2019 அன்று முதல் காரைக்கால் பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு, முதற்கட்ட போராட்டமாக திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத்து சங்க செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கௌரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் அய்யப்பன் ஆகியோர் எடுத்துரைத்தனர். முடிவில் சங்க பொறுப்பாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

Tags : Commune Panchayat ,Thirunallar ,
× RELATED பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு...