சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்: ஸ்மார்ட் பைக் நிறுவனம் செயல்படுத்துகிறது

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் முதல்முறையாக 500 இ-சைக்கிள்களை இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்தி வரும் ஸ்மார்ட் பைக் நிறுவனம் இதை செயல்படுத்துகிறது. புகையில்லா வாகன போக்குவரத்து கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை சேர்ந்த ஸ்மார்ட் பைக் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி முதற்கட்டமாக மெரினா கடற்கரை, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. மெரினா கடற்கரையில் 5 சைக்கிள் நிலையங்கள், அண்ணா நகர், செனாய் நகர், திருமங்கலம் உள்ளிட்ட 25 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள்  ஒரு மணி நேரத்திற்கு ₹5ம், அடுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ₹9 ம் கட்டணம் செலுத்தி இவற்றை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 49 செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். இதைத் தவிர்த்து 249 செலுத்தி ஒரு மாதத்திற்கும், 699 செலுத்தி 3 மாதத்திற்கும் பயன்படுத்தலாம்.

இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் மேலும் 15 இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி  நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டு வரும் தி.நகர் பாண்டி பஜாரில் காவல் நிலையம் எதிரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அருகில் மற்றும் பிக் பஜார் முன்பகுதியிலும், ஜி.என்.செட்டி சாலையிலும் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் தேனாம்பேட்டை, ஏஜிடிஎம்எஸ், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையம், இந்திரா நகர், கஸ்தூரி பாய் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பறக்கும் ரயில் நிலையங்களிலும் சைக்கிள் நிலைங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் 50 இடங்களுக்கு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஸ்மார்ட் பைக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையங்களில் முதல் முறையாக பேட்டரியில் இயங்கும் இ-சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஸ்மார்ட் பைக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஷேரிங் திட்டம் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக அளவில் சைக்கிள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவற்றில் இ-சைக்கிள்களை அறிமுகம் செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் பைக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சைக்கிள் அனைத்தும் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். பொதுமக்கள் இந்த சைக்கிளை மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். சைக்கிள் எடுக்கும்போதும் பேட்டரி மூலம் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும். பிறகு பொது மக்கள் சைக்கிள்களை ஓட்டுவதன் மூலம் பேட்டரி சார்ஜ் செய்யப்படும். இதன் மூலம் அதிக நேரம் சைக்கிள் பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்முறை
ஸ்மார்ட் பைக் நிறுவனம் இந்தியாவில்  சென்னை, போபால், டெல்லி, ஐதாராபாத், ராஞ்சி, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் முதல் முறையாக சென்னையில்தான் இ-சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : 500 e-Cycle Operating Corporation ,Smart Bike Company ,Chennai ,
× RELATED வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...