×

தினமும் அதிகார சண்டைதான் நடக்கிறது

புதுச்சேரி, அக் 10:  ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மக்களுக்கு எதுவும் நல்லது நடக்கவில்லை, தினமும் அதிகார சண்டைதான் போட்டுக்கொண்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி சரமாரி குற்றம் சாட்டியுள்ளார். காமராஜர்நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து  ரங்கசாமி வீடு, வீடாகச் சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். என்ஆர்காங்கிரசை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, டிபிஆர் செல்வம் எம்.எல்.ஏ, முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர் ஆதிலட்சுமி, மதி (எ)வெங்கடேசன், அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, வையாபுரிமணிகண்டன் எம்எல்ஏ, மாநில துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, தொகுதி செயலாளர் ஜானிபாய், தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், கதிர்காமம் தொகுதி செயலாளர் பால்ராஜ், பாஜக தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ, பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறுகையில், முதல்வர் நாராயணசாமி எந்த திட்டத்தையும் கொண்டுவராததால்,  எதிர்க்கட்சிகளை பற்றி பேசிவருகிறார். தினமும் கொலை, கொள்ளைதான் நடக்கிறது.  நான் யாரையும் எதிரியாக நினைத்தது இல்லை. புதுச்சேரியில் அப்படி யாரும் செயல்பட்டது கிடையாது. எதிர் கட்சிகளை குறை கூறுவது, தினமும் யாருக்கு அதிகாரம் என்று நீதிமன்றம் செல்வது ஆகியவைகளைத்தான் ஆளும் கட்சி செய்தது. ஏன் மக்கள் நலத்திட்டத்தை செயல்படுத்தவில்லையென கேட்டால், மத்திய அரசு, துணை நிலை ஆளுநர், எதிர்க்கட்சியை காரணம் காட்டுவது. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சாலை வசதி, புதிய கட்டிடம் கட்டியுள்ளீர்களா? குடிநீர் பிரச்னையை தீர்த்துள்ளீர்களா? மாணவர்கள் கல்விக்கு உதவி செய்தீர்களா? புதிய கல்லூரி கொண்டுவந்தீர்களா? மீனவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், விவசாயிகள் என எந்த பிரிவினருக்காவது புதிதாக திட்டங்கள் உண்டா? என்றால் பதில் இல்லை.  பழைய திட்டங்களையாவது தடையில்லாமல் செய்தீர்களா?  நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும் இதே அதிகாரம்தான் இருந்தது. அப்போது அனைத்து துறைக்கும் நிதி முறையாக ஒதுக்கி, செலவு செய்தோம். புதுச்சேரி வளர்ச்சி பெற்றது. இன்று எந்த துறையிலும் எந்த வேலையும் நடக்கவில்லை.  புதுச்சேரியில் நல்ல மருத்துவ வசதி கிடைக்கும் என்று அனைவரும் தேடி வந்தனர். தற்போது அந்த மருத்துவ வசதி கிடைக்கின்றதா? வெண்டிலேட்டர், எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் அனைத்துக்கும் தனியாருக்கு செல்ல கூறுகின்றீர்கள். இது தேவையில்லாத இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆளா? இல்லை. இந்த தொகுதியில் வளர்ச்சி உள்ளதா? இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றால் தடுக்கி விழ வேண்டியதுதான். எப்போதும் மத்திய அரசையும், எதிர்க்கட்சியையும், ஆளுனரையும் குறை கூறும் போக்குதான் உள்ளது. யார், யாருடைய எம்.எல்.ஏ.க்கள் எங்கு உள்ளனர் என்பது,  அவர்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...