×

புதுவை பிராந்தியம் முழுவதும் பேனர்களை அகற்ற வேண்டும்

புதுச்சேரி, அக். 10:    காமராஜர் நகர் இடைத்தேர்தலையொட்டி புதுவை பிராந்தியம் முழுவதும் உள்ள பேனர்கள், சுவரொட்டிகளை அழிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் உத்தரவிட்டுள்ளார்.  புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அனைத்து சிறப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தலைமை தாங்கினர். சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ், சப்-கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இடைத்தேர்தலை எவ்வித தடங்கலுமின்றி நடத்த, மேற்கொள்ள வேண்டிய உரிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.  

 மாவட்ட எல்லைகளை பலப்படுத்துவது என்றும், பறக்கும் படையினரை அதிகப்படுத்துவது, என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், மொத்தமாக மது பரிவர்த்தனை செய்வோர் குறித்து பறக்கும் படையினர் உடனடி தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் மற்றும் மது விநியோகம் தடுப்பது சம்பந்தமாகவும், எடுக்கப்பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை காமராஜர் தொகுதிக்கு மட்டும் அல்ல. புதுவை பிராந்தியம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நகராட்சி ஆணையர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், போலீஸ் ஒத்துழைப்புடன் அனைத்து பேனர் சுவரொட்டிகள், சுவரில் எழுதப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அழிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் உத்தரவிட்டுள்ளார்.

Tags : region ,Puthuvai ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!