×

பெரியகங்கனாங்குப்பம் ஊராட்சியில் செயல்படாத குடிமராமத்து பணி

கடலூர், அக். 10: கடலூர் மாவட்டத்தில் பருவமழை தாக்கம் காரணமாக பல்வேறு நீர்நிலைகளின் வாய்க்கால்கள் மற்றும் குளங்கள், ஏரிகள் உள்ளிட்டவைகள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குடிமராமத்து பணிக்கு 8 கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிமராமத்து பணியில் ஏரி, குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடலூர் அருகே மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் எதிரிலேயே உள்ளது பெரிய கங்கனாங்குப்பம் ஊராட்சி. சுமார் எட்டாயிரம் பேர் வசித்து வரும் இந்த ஊராட்சியில் சின்னகங்கனாங்குப்பம், விஜயலட்சுமி நகர், ஓம் சக்தி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர பகுதிகள் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஆண்டுதோறும் மழைநீர் சூழ்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஊருக்குள் தண்ணீர் புகுவது வழக்கம். இதுபோன்று புதுச்சேரியின் பாகூர் ஏரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வடிகால் நீர் இந்த ஊராட்சியின் வழியாகத்தான் பெண்ணை ஆற்றில் கலந்து பின்னர் கடலில் கலக்கிறது. இதற்கிடையே தொடர்ந்து மழைக்காலங்களில் பாதிக்கப்படும் இந்த ஊராட்சியில் குடிமராமத்து பணிகளை முழுமையாக தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும், வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர். ஆனால் பெயரளவுக்குகூட குடி மராமத்து பணி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சியில் உள்ள குயவன்குளம் ஆக்கிரமிப்பில் சூழப்பட்டு மாயமாகியுள்ளது. இந்த குளத்தை மீட்டு தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்று கிழக்கு கடற்கரை சாலையில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஐயனாரப்பன் குளம் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் அதனை அகற்றி, சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோன்று ஆண்டியப்பன்குளம் உள்ளிட்ட மேலும் இரண்டு குளங்கள் அடையாளம் காணாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீர்நிலை பகுதிகள் ஊராட்சியில் ஆக்கிரமிப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தூர்ந்துபோய் காட்சியளிக்கிறது. குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான சுவடே இந்த ஊராட்சியில் இல்லாமல் உள்ளது. இதனால் வரும் மழைக்காலத்தில் வெள்ளநீர் வழக்கம்போல் கிராமத்தை சூழ்ந்து கிராம மக்களை விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையாக ஏரி, குளங்களை இந்த ஊராட்சியில் தூர்வாரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டால் மழைநீர் வடிகால் பகுதியாக உள்ள இக்கிராமம் முழுமையாக பாதிப்பில் இருந்து தப்பி விவசாயமும், கிராமமக்களும் பயன் பெறுவர். ஆனால் அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சியை மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும், குறைகளை கண்டறிந்து தூர்வாரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பெரியகங்கனாங்குப்பம் ஊராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்