×

கும்மிடிப்பூண்டி அருகே மனைவி சமாதி மீது கணவன் சடலம்

கும்மிடிப்பூண்டி, அக். 9: மனைவி சமாதியில் கணவன் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது சடலத்தை எடுக்க விடாமல் போலீசாருடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த கொண்டமாநெல்லுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். சிவகுமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கரடிபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நோய்வாய்பட்ட  அம்பிகா, தீவிர சிகிச்சை பலனின்றி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவரது உடல் கரடிபுத்தூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு அம்பிகாவின் உறவினர்களுக்கும் சிவகுமாருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை நீடித்து அவ்வப்போது கைகலப்பில் முடியும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி  சிவக்குமாரை சிலர் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்தகாயமடைந்த  சிவக்குமார் ஸ்டான்லி மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கரடிபுத்தூர் கல்லறை தோட்டத்தில் உள்ள அம்பிகா கல்லறை மீது சிவக்குமார் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டனர். புகாரின்பேரில் பாதிரிவேடு போலீசார் வந்து, சிவகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனர். ஆனால், சிவகுமாரை யாரோ அடித்து கொலை செய்து, சடலத்தை அம்பிகாவின் கல்லறை மீது போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதில் தொடர்புடையவர்களை  உடனே கைது செய்ய வேண்டும். அதுவரை சடலத்தை எடுக்க விடமாட்டோம் என கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். சிவகுமார், விஷம் குடித்து தற்கொலை செய்தாரா அல்லது  மர்ம நபர்கள் யாராவது அடித்து கொன்று சடலத்தை மனைவின் கல்லறை மீது போட்டுவிட்டு சென்றார்களா என்ற விவரம் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம்தான் தெரிய வரும். அந்த அறிக்கைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அனுமதியுங்கள் என்று அவரது உறவினர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : tomb ,Kummidipoondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...