×

அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் படுக்கும் அவலம்: போதிய படுக்கை வசதி இல்லை

திருவள்ளூர், அக். 9: அரசு தலைமை மருத்துமனையில் படுக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் தரையில் படுத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் உள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு உடல் நல குறைவு, விபத்து சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் உள், வெளி நோயாளிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிட வசதி, படுக்கை வசதி மற்றும் தேவையான நவீன மருத்துவ கருவி வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், ஒரு படுக்கையில் இரண்டு பேருக்கும், படுகாயம், காயம் அடைந்த பலரை தரையில் படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கும் அவல நிலை உள்ளது.'

தமிழக அரசு தரும் மகப்பேறு நிதியுதவியை பெற மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள ஏராளமான ஏழை பெண்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் பிரசவ செலவு அதிகமாக உள்ளதால், ஏராளமான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றனர். இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு போதிய படுக்கை வசதியில்லாததால், அவர்களை தரையில் படுக்க வைக்கப்படும் அவல நிலை உள்ளது. பிரசவத்திற்கு பின்னும், பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் தரையில் படுத்திருக்கும் நிலை தொடர்கிறது. பாதுகாப்பின்றி குழந்தைகளுடன் படுத்திருப்பதால், இங்கு குழந்தை திருடு போன்ற செயல்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகளையும், மருத்துவமனையில் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Hospital Maternity Ward ,
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்