×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையம்

வாலாஜாபாத், அக். 9: வாலாஜாபாத் ஒன்றியத்தில், கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் படுநெல்லி ஊராட்சியில், 1,800க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள அருந்ததியர் பாளையத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் கட்டி திறக்கப்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். ஆனால், இந்த அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதிகளில் ஒன்றான மின் இணைப்பு இதுவரை கொடுக்கவில்லை. இதனால், அங்கு படிக்கும் குழந்தைகள்பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.'

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அருந்ததியர் பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் அடிப்படை தேவையான மின் இணைப்பு இல்லை. இதனால், வெயில் நேரங்களில் இந்த தளம் போட்ட கட்டிடத்தில் குழந்தைகள் வியர்வை கொட்டும் நிலையில் உள்ளனர். மழைக்காலங்களில் கொசு தொல்லையும், ஈ தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இந்த அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மின் இணைப்பு இருந்தால், மின் விசிறி பயன்படுத்தலாம். இங்கு மின்வசதி இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இதுபற்றி பலமுறை கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள துணை மின்நிலைய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பு கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Anganwadi Center ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...