×

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மல்டி ஸ்பெஷாலிட்டி பிரிவு: அடுக்கம்பாறையில் தனி இடம் தேர்வு

வேலூர், அக்.9: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த மல்டி ஸ்பெஷாலிட்டி பிரிவு அமைவதற்கான இடம் அடுக்கம்பாறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் கி.பி.1885ம் ஆண்டு இப்போதுள்ள ஆற்காடு சாலையில் மருந்தகமாக செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை, வேலூர் நகரின் மத்திய பகுதியில் 1915ம் ஆண்டு சென்னை மாகாண கவர்னர் லார்டு பென்ட்லண்ட் பிரபுவால் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 528 படுக்கைகளுடன் மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்த அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தும் அரசாணை கடந்த 2000ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவப்பணிகள் இயக்குனரகத்தில் இருந்து மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் கை்கு வந்த வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை அரசினர் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக உருமாறியது. இதற்காக வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் 33.95 ஏக்கர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுமையாக இடம் மாறியது.

பொது மருத்துவம், தாய் சேய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் எலும்பியல், மனநலம், எலும்பியல், நீரிழிவு, புற்றுநோய், குழந்தைகள், காது, மூக்கு, தொண்டை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அவசரகால மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 54 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 25 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு 950 அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 450 பிரசவங்களும், 350 சிசேரியன் பிரசவங்களும் நடக்கின்றன. இருதய நோயாளிகள் 2 ஆயிரத்து 500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். 471 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு நாள் ஒன்றுக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு ஈடாக செயல்பட்டு வரும் இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சமீபத்தில் தாய்சேய் சிகிச்சை பிரிவில் சிறந்த விளங்கியதற்காக தேசிய அளவிலான விருதையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இருதய சிகிச்சை துறை தனியாக தொடங்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி நடந்து வரும் நிலையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு என்ற மல்டி ஸ்பெஷாலிட்டி பிரிவு ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மருத்துவமனை வளாகத்தில் இடம் இல்லாததால் கடந்த வாரம் நெல்வாய், சாத்துமதுரை, அடுக்கம்பாறை என பல பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து அடுக்கம்பாறையில் மருத்துவமனை அருகிலேயே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன்தான் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதை தெரிவிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Multi Specialty Unit ,Vellore ,Government Medical College ,
× RELATED நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு