×

வேலூர், திருவண்ணாமலையில் 353 பேருக்கு டெங்கு பாதிப்பு: காய்ச்சலுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு அரிசி கஞ்சி

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 353 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காய்ச்சலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு இவர்களுக்கு மருந்து, மாத்திரைகளுடன் தற்போது அரிசி கஞ்சியும் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 345 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இதுவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 95 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2915 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம் 353 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக இரண்டு மாவட்டங்களிலும் 500க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அலோபதி மருந்துடன், நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றுடன் அரிசி கஞ்சியும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷிடம் கேட்டபோது, ‘டெங்கு பாதித்தவர்கள் உட்பட காய்ச்சலால் சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருந்துடன், நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல், அரிசி கஞ்சியும் சேர்த்து வழங்கப்படுகிறது. அரிசி கஞ்சி ஒரு மாதகாலமாக வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags : dengue victims ,Vellore ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...