×

நாங்குநேரி தொகுதியில் காங், வெற்றி பிரகாசமாக உள்ளது

நெல்லை, அக். 9: நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் பொதுமக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதால் எங்களது வெற்றி பிரகாசமாக உள்ளது என வசந்தகுமார் எம்பி தெரிவித்தார். இதுகுறித்து நெல்லையில் வசந்தகுமார் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2011-2016ம் ஆண்டு வரை காங்., கட்சியை சேர்ந்த லெக்கான் சேர்மனாக இருந்தார். நெல்லை தொகுதியில் காங்.,கட்சியை சேர்ந்த ராமசுப்பு கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து லெக்கான் போட்டியிட்டதால் அவர் காங்.,கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அர்த்தமாகும். ஆனால் அவர் காங்.,கட்சியில் இருப்பது போன்று காட்டிக்கொண்டு நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி காங்.,வேட்பாளர் ரூபி மனோகரனிடம் சில கோரிக்கைகளை வைத்தார். அதற்கு அவர் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் நான் முடிவு செய்ய முடியாது என மறுத்து விட்டார்.

இதனால் அவர் அதிமுக அமைச்சர்களிடமும் அதே கோரிக்கைகளை வைத்தார். அதற்கு அவர்கள் சம்மதித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறுகின்றனர். அதிமுக கட்சிக்கு அவர் சென்றதால் காங்.கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. எங்களது வெற்றி 100 சதவீதமாகும். நாங்குநேரி தொகுதியில் நான் எம்எல்ஏவாக கடந்த மூன்று ஆண்டுகள் இருந்தேன். அப்போது அந்த தொகுதியில் எட்டு ஆண்டுகளில் செய்ய வேண்டிய வேலைவாய்ப்பு, சாலைகள் அமைத்தல், குளங்கள் மராமத்து, அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துள்ளேன்.

இதனால் எனக்கும் அந்த தொகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே நல்ல நெருங்கிய தொடர்பு உள்ளதால் எங்களது வெற்றி பிரகாசமாக உள்ளது. மேலும் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி தொகுதிகளை இணைக்கும் பாலம் ரூ.3 கோடி செலவில் அமைக்கும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த பகுதியில் 10 சென்ட் நிலம் தனியாரிடம் உள்ளது. அவர்களிடம் பேசி விரைவில் சரி செய்த பின்பு பாலம் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில காங்., தலைவர் அழகிரி, காங்., செயல் தலைவர்கள் மயூரா ஜெயகுமார், மோகன் குமாரமங்கலம், சட்டசபை காங்., தலைவர் ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ஏர்வாடி தேர்தல் பொறுப்பாளர் அமீர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளோடு சந்திப்பு

காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி., மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகம் சென்று அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபராக், மாநில பொதுசெயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் அகமது நவவி, மாவட்ட தலைவர் கனி ஆகியோரை நேரில் சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிக்க கேட்டு கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஏர்வாடி பொறுப்பாளர் அமீர்கான், வர்த்தக காங்கிரஸ் ராஜகோபால், அப்துல்காதர், இளைஞர் காங்கிரஸ் ஆசாத் பாதுஷா, குத்புதீன், எஸ்டிபிஐ சாகுல்ஹமீது உஸ்மானி, பர்கிட் அலாவுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : constituency ,victory ,Nanguneri ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...