×

மழைநீரை சேகரித்தால் மானாவாரியிலும் மகத்தான மகசூல் பெறலாம் வேளாண் அதிகாரி தகவல்

மணப்பாறை, அக்.9: மழைநீரை சேகரித்தால் மானாவாரியிலும் மகத்தான மகசூல் பெறலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வட்டாரத்தில் 2019-20ம் ஆண்டு செயல்படுத்தப்படும் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எளமணம் கிராமத்தில் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையினை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, மானாவாரி நிலத்தில் பெய்யக்கூடிய மழை நீரினை தடுப்பணை, பண்ணைக்குட்டை, சம உயர வரப்புகள் மற்றும் கோடை உழவு பணிகள் மூலமாக மழை நீரை சேமிப்பது மூலம் பயிர் வறட்சி தாங்கி நல்ல மகசூல் கிடைக்கும் எனவும், பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளும்படியும், கோடை உழவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ஒன்றுக்கு மானியம் ரூ.1,250 வீதம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமாக முழு மானியத்தில் பனை மர விதைகள், பழ மரக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதாகவும், விவசாயிகள் பெற்று தங்கள் நிலங்களில் நடவு செய்து கூடுதல் வருவாய் பெறும்படி கேட்டுக்கொண்டார். விதைகள், உயிர் உரங்கள், விதைநேர்த்தி மருந்துகள், ஊடுபயிர் சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கரையாம்பட்டி மற்றும் சீத்தப்பட்டி கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் டிகேஎம் 13 மற்றும் உளுந்து வம்பன்-6, வம்பன்-8, ரக விதை பண்ணை வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆர்வமுள்ள விவசாயிகள் நெல், சிறு தானியம், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் விதைப் பண்ணைகள் அமைத்து விதை உற்பத்தி செய்தால் விளைபொருளுக்கு கூடுதல் விலை கிடைப்பதுடன், உற்பத்திக்கான ஊக்கத் தொகையும் கிடைக்கும் எனவும் கூறினார்.

தற்போது வையம்பட்டி வட்டாரத்தில் கிடைத்துள்ள மழையினை பயன்படுத்தி மானாவாரி மற்றும் தோட்டக்கால் நிலங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளும்படியும், தரிசு நிலங்களை பண்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருமாறும் விவசாயிகளுக்கு தேவையான நெல் டிகேம்-13, கோ(ஆர்)51, விதைகள், உளுந்து வம்பன்-6, வம்பன்-8, நிலக்கடலை ஜிஜேஜி-9, சான்று பெற்ற விதைகள் 50 சத மான்யத்திலும், உயிர் உரங்கள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்ட உரங்கள், இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது வையம்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ரெங்கராஜன், உதவி விதை அலுவலர் செந்தில்குமார், வேளாண் உதவி அலுவலர் சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Rain water harvesting ,
× RELATED தர்மபுரியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம்