×

நீர் ஆதாரங்களை மேம்படுத்த நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் விரைவில் உருவாக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம், அக். 9: நீர் ஆதாரங்களை மேம்படுத்த நீர்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டுமென அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை வலியுறுத்தியது. கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் 9ம் ஆண்டு அன்னை காவிரி திருவிழா மற்றும் நீர்நிலை விழிப்புணர்வு பற்றிய சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை அறங்காவலர் மதியழகன் தலைமை வகித்தார். வீரசைவ பெரியமடம் ல நீலகண்ட சாரங்க மகாசுவாமி, நாச்சியார்கோவில் ஆதீனம் கந்த பரம்பரை சிவசுப்ரமணிய தேசிகர், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் சுவாமி ராமானந்தா, கோவை மாவட்ட தத்துவ ஞானசபை ஆச்சாரியர் வேதாந்த ஆனந்தா, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி, கோணக்கரை விவேகானந்தா ஆஸ்ரமம் பத்மநாப சுவாமி, சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேய சேவா டிரஸ்ட் வீரராகவ சுவாமி, அன்னை காவிரி துலா மாத தீர்த்த யாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் கோரக்கர் சித்தர் ஆகியோர் பேசினர். இதில் வரும் 19ம் தேதி தலைக்காவிரியில் துவங்கி நவம்பர் 8ம் தேதி பூம்புகார் வரை துலா மாத தீர்த்த ரத யாத்திரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆறு, வாய்க்கால் போன்ற எந்தவொரு நீர் நிலையிலும் குப்பைகள் கொட்டுவதை கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லையென உறுதி கொள்ள வேண்டும். ஆறுகளில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். தமிழக அரசு நதிகளை பாதுகாத்து கரைகளை உயர்த்த வேண்டும். ஆறு, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு, குட்டை போன்ற நீர் ஆதாரங்களை மேம்படுத்த நீர்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,Ministry of Water Resources ,Ministry ,
× RELATED செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6...