×

ஜெயங்கொண்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி மந்தம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்காததால் பயணிகள் அவதி

ஜெயங்கொண்டம்,அக்.9: ஜெயங்கொண்டம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்காததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, விருத்தாச்சலம், சிதம்பரம், கும்பகோணம், பெரம்பலூர் போன்ற பகுதிகளுக்கும் திருச்சி, கரூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு ஜெயங்கொண்டம் வழியாக தான் செல்லவேண்டும். இதனால் பேருந்து நிலையம் போதிய இடவசதியின்றி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து நிலையம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டிடங்களின் மேல்புறம் சேதமடைந்து பலமுறை காரைகள் பெயர்ந்து விழுந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கடை உரிமையாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் புதிய பேருந்து நிலையம் கட்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், சட்டமன்ற தொடரில் கோரிக்கை விடுத்து 110 விதியின்கீழ் மானிய கோரிக்கையில் 1.82 ஏக்கர் பரப்பில் ரூ.3 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி புதிய பேருந்து நிலைய கட்டிட பூமி பூஜை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ள பழைய பேருந்து நிலைய கட்டிடங்களை இடிக்க முடியாமல் பேருந்து நிலையத்தின் பின்பகுதி சைக்கிள்கள் நிறுத்துமிடம் மற்றும் வெற்று இடங்களில் மட்டுமே கட்டிட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகள் பலமுறை பேருந்து நிலைய கட்டுமான பணி தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடிக்க வேண்டுமென ஜெயங்கொண்டம் நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து பஸ்களும் வந்து திரும்பி செல்லும் பகுதியில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி முழுவதும் கட்டுமானத்துக்கு தோண்டிய பள்ளத்தில் இருந்து எடுத்த பல லாரி மண்ணை கொட்டியுள்ளனர்.
இதனால் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள், பயணிகளை இறக்கி விட்டு விட்டு திரும்பவும் அதே திசையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் பஸ்சை இயக்க முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர். பேருந்து நிலையத்தில் பஸ்சை காத்திருப்பில் வைக்க முடியாமல் உடனடியாக எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். முக்கியமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே உடனடியாக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அப்போது தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் போன்றவர்கள் குறித்த நேரத்துக்கு அலுவலகம், பள்ளிகளுக்கு செல்ல முடியும். எனவே எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி துரிதமாக செயல்பட்டு தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து புதிய நவீன பேருந்து நிலைய கட்டிட பணியை வேகப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Jayankondam ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை