×

பொறையார் - மங்கைநல்லூர் சாலையில் நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் தொடர் விபத்து

தரங்கம்பாடி, அக்.9: நாகை மாவட்டம், பொறையாரில் இருந்து மங்கைநல்லூருக்கு செல்லும் சாலையில் எடுத்துக்கட்டி அருகே நெடுஞ்சாலைதுறை நாகை கோட்ட பொறியாளரின் அலட்சியத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொறையாரில் இருந்து மங்கைநல்லூருக்கு வீரசோழன் ஆற்றின் கரையில் ஒரு சாலை செல்கிறது. அந்த சாலை இப்பொழுது விரிவாக்கம் செய்யபட்டு தார் சாலை போடப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக பொறையார், காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் காரைக்கால், செம்பனார்கோவில், மயிலாடுதுறை, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அந்த சாலையில் எடுத்துகட்டி அருகே ஒரு வளைவு உள்ளது. அந்த இடத்தில் கிராம சாலை ஒன்றும் பிரிந்து செல்கிறது. ஒரு பக்கம் விரசோழன் ஆறும், மறுபக்கம் வயலும் உள்ளது.

அந்த இடத்தில் கரை பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காடாக காட்சியளிக்கிறது. அதனால் வாகன ஓட்டிகளுக்கு அந்த வளைவு இருப்பது தெரியாமல் விபத்துகள் நடப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு தெரிகின்ற வகையில் அந்த இடத்தில் ரிப்லக்டர் அமைக்க வேண்டும். வௌ்ளை, மஞ்சள், கோடுகளை போட வேண்டும். என்று அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை நாகை கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் நாகை கோட்ட பொறியாளர் பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியபடுத்தி வருகிறார். அதனால் தினமும் அந்த இடத்தில் இருசக்கர வாகனமோ, அல்லது நான்கு சக்கர வாகனமோ விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது. நெடுஞ்சாலைத்துறை இனியும் கால தாமதப்படுத்தாமல் விபத்துகளை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Periyar - Manganinallur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி