×

நீர் நிலைகளில் காவிரி நீரை நிரப்பி குடிநீர் ஆதாரம், விவசாயம் மேம்படுத்த வேண்டும் கரூர் மா. கம்யூ. கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், அக். 9: காவிரி நீரை நீர்நிலைககளில் நிரப்பி குடிநீர், விவசாயத்தை மேம்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சக்திவேல் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கந்தசாமி பேசினர். செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ராஜூ, லக்குவன், ஜோதிபாசு, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரியாற்றில் வெள்ள காலங்களில் தண்ணீர் சேகரிக்க முடியாமல் உபரியாக லட்சக்கணக்கான அடி தண்ணீர் கடலில் வீணாக கலந்து விடுகிறது. இதனால் கோடைகாலங்கள், மழை பெய்யாத காலங்களில் வறண்ட மாவட்டமாக மாறி விடுகிறது. இதனால் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பஞ்சப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக வறண்ட தரிசு நிலங்களாகவும் உள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் சொல்லொணா துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களின் துயரங்களை போக்கிடவும், மாவட்டம் முழுவதும் விவசாயம் குடிநீர் தடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டி அதன் மூலம் நீரை தேக்கி வைக்க வேண்டும். மாயனூர் தடுப்பணையில் இருந்து கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி ஏரி, சிவாயம் குளம், கடவூர் வட்டம் மாவத்தூர் ஏரி, தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள பல்வேறு ஏரி குளங்களிலும் க.,பரமத்தி ஒன்றியம் தாதம்பாளையம் ஏரியிலும், உபரிநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று ஏரி குளங்களை நிரப்பி அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களையும் மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாத்திட கரூர் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Cauvery ,Communist ,party meeting ,
× RELATED மேட்டூர் அணை வந்தடைந்தது காவிரி நீர்